அடக்குமுறையால் தடுக்க முடியாது…மூடு டாஸ்மாக்கை!!

TMPDOODLE1440729111118அடக்குமுறையால் தடுக்க முடியாது…மூடு டாஸ்மாக்கை!!

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

மக்கள் அதிகாரம் தலைமைக்குழுவின் சார்பில் 26-08-2015 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் தலைமைக்குழு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தோழர் காளியப்பன், தோழர் அமிர்தா ஆகியோர் கலந்து கொண்டு, “மூடு டாஸ்மாக்” இயக்கத்தின் மீது காவல்துறையும் உளவுத்துறையும் மேற்கொண்டுவரும் கடுமையான அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆகஸ்ட் 31-ல் மக்கள் அதிகாரத்தின் போராட்டம் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினர். அந்த சந்திப்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி :

மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு

மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர்கள் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தோழர் காளியப்பன், தோழர் அமிர்தா

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகம் முழுக்க டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் அரசு மற்றும் காவல்துறையால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டு, ஒரு அசாதாரண சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மனித சங்கிலி போராட்டம் நடத்திய தே.மு.தி.க-வினர் காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டனர். மாற்றுத் திறனாளிகள் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்படுகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேருந்தில் பிரச்சாரம் செய்ததற்காகக் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மதுரை, ராஜபாளையம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உளவுத்துறையின் மூலம் மிரட்டப்படுகின்றனர்.

திருச்சியில் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களை மாவோயிஸ்டுகளைப் போல் என்கவுண்டரில் கொல்லப்போவதாக மிரட்டுகிறது கியூ பிரிவு போலீசு.

மதுரையில் லயனல் அந்தோணிராஜ், வழக்கறிஞர் நடராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் வீட்டிற்குச் சென்ற உளவுப் பிரிவு போலீசார் அவர்களை போட்டோ எடுத்து மிரட்டியுள்ளனர்.

ராஜபாளையத்தில் வீட்டில் இருந்த பெண்களிடம் ரேசன் கார்டை வாங்கி போட்டு எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆகஸ்டு – 31-ல் எந்தப் போராட்டமும் நடத்தக் கூடாது மீறினால் பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைப்போம் என பல்வேறு இடங்களில் உளவுப் பிரிவு போலீசார் மிரட்டி வருகின்றனர்.

ஏற்கனவே டாஸ்மாக்குக்கு எதிராக போராடி சிறையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பு.மா.இ.மு உறுப்பினர்களை காவல்நிலையம் மற்றும் சிறையில் போலீசு, சிறைத்துறை அதிகாரிகள் தாக்கியது உண்மைதான் என மாவட்ட நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளில் இன்று வரை பிணை மறுக்கப்படுகிறது.சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான காவல் நீட்டிப்பு அப்பட்டமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செய்யப்படுகிறது. அரசின் இச்சட்டவிரோத செயல்களுக்கு நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன.

சிறையில் உள்ள மாணவிகளை விபச்சார வழக்கில் அடைத்துவிடுவதாக பெண்கள் சிறைக்கு சட்டவிரோதமாக சென்று மிரட்டுகிறார் உமாசங்கர் என்ற உளவுத்துறை அலுவலர்.

இவ்வாறு டாஸ்மாக்குக்கு எதிராக போராடுவோர், பிரச்சாரம் செய்வோர் மீது கொலைமுயற்சி (307 IPC), இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டுதல் (குடிப்போர் – குடிக்காதோர் ! ) என மிகக் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்துகிறது. வன்முறையாளர்கள் எனவும் முத்திரை குத்துகிறது அரசு.

people-power-press-meet-3ஆனால், காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை ஆளும் அ.தி.மு.க-வினரால் ஏவப்படுகிறது. அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன் அ.தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதா- வின் ஆசியோடு நேரடியாக வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது தடியடி, வழக்கு, கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுடன் ஆளுங்கட்சி நடத்தும் வன்முறைக்கு பாதுகாப்பு கொடுத்து வழி நடத்துகிறது போலீசும் உளவுத்துறையும்.

சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக ஆளும்கட்சி- உளவுத்துறை – போலீசு ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வாறாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மத்தியில் உள்ள மோடி அரசும் துணை நிற்கிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இப்போக்கு மிகவும் அபாயகரமானது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் கூட காவல்துறை, தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு மோடி அரசின் ஆதரவோடு வன்முறை அராஜகம் நடப்பது உறுதி.

ஆகவே, தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் மக்கள் இயக்கங்கள் மீது மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் பொய் வழக்கு, அவதூறு வழக்கு, கருத்துரிமை பறிப்பு என அடக்குமுறை அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இத்தகைய அபாயகரமான சூழலில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்த அ.தி.மு.க அரசின் காட்டாட்சிக்கு எதிராகவும், டாஸ்மாக்கை ஒழிக்கவும் ஓரணியில் திரண்டு போராட அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம். அ.தி.மு.க அரசின் அடக்குமுறை மற்றும் டாஸ்மாக்குக்கு எதிரான போர்க்குரலாக வரும் ஆகஸ்டு – 31 அன்று சென்னை, மதுரை, தர்மபுரி, கடலூர், திருச்சி ஆகிய 5 மையங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மக்கள் இயக்கங்களை இணைத்து “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!” என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த இருகின்றோம்.

ஆகவே, இப்போராட்டத்தில் அனைத்துக்கட்சிகள் அமைப்புகள், மாணவர்கள் வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகிய அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை எமது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

தோழர் காளியப்பன்

தோழர் அமிர்தா

தலைமைக்குழு உறுப்பினர்கள்,

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

Advertisements

தி.மு.க.வின் மதுவிலக்கு அறிவிப்பு வரவேற்பும்…வேண்டுகோள்களும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பத்திரிகை செய்தி

தி.மு.க.வின் மதுவிலக்கு அறிவிப்பு 

வரவேற்பும்…வேண்டுகோள்களும்

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பத்திரிகை செய்தி ( 21/7/2015 )
                          8754580274, 8754580270

”சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதை சட்ட பஞ்சாயத்து இயக்கம் உளப்பூர்வமாக வரவேற்கிறது. சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் மதுக்கடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு தி.மு.க. வைத்துள்ள முதற்புள்ளி இது.  அடுத்த தலைமுறையைக் காப்பாற்றும் இந்த அறிவிப்பை தி.மு.க வெளியிட்டிருப்பது அரசியல்ரீதியாக அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இனி மதுவிலக்கு நிலைப்பாடு குறித்துப் பேசாமல், எந்த அரசியல் கட்சியும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கமுடியாது என்ற நிலையை தி.மு.க.வின் அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கையோடும், அறிவிப்போடும் நின்றுவிடாமல் இறுதிவரை உறுதியாக நின்று மதுவிலக்கை தி.மு.க. அமல்படுத்தவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது, சில வேண்டுகோள்களோடு…

மதுவிலக்கிற்காக சிறை செல்லத் தயார் … அண்ணா

 1. தேர்தல் வரை காத்திருக்காமல் களப் போராட்டங்கள் மூலம் உடனடியாக மதுவிலக்கை நோக்கிய முயற்சிகளை எடுத்து ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தரவேண்டும். இந்த சமயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் 12.4.1968 அன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டில் பேசியதை நினைவு கூறுகிறோம்.

  மாநாட்டில் பேசிய அண்ணா:
  “….மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்குக் கொள்கைக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களான திரு.காமராஜ் அவர்களுடனும் திரு.பக்தவத்சலம் அவர்களுடனும் கை கோர்த்துப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். மூவரும் ஒன்று சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுவோமென்றால் அந்த நாள் பொன்னாள். இந்த நல்ல முயற்ச்சிக்கு அந்த இரண்டு காங்கிரஸ் தலைவர்களும் இசைவைத் தெரிவிப்பார்களானால் நான் பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல மதுவிலக்கை ரத்து செய்துள்ள மாநிலங்களில் சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து மதுவிலக்கை அமுல்படுத்தக் கேட்டுகொள்வோம். இம்முறையில் நமக்குச் சிறைத் தண்டனை கிடைத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று அறைகூவல் விடுத்தார்.

  மதுவிலக்கைத் தளர்த்தியுள்ள மற்ற மாநிலங்களுக்குச் சென்று, அங்கு மதுவிலக்குகோரி போராடி சிறைசெல்லத்தயார் என்றார் அண்ணா. அண்ணாவால் துவங்கப்பட்ட தி.மு.கவினரும் அவரின் வழிநடந்து தமிழகந்தழுவிய “டாஸ்மாக் மறியல்” நடத்தி “சிறை நிரப்பும் போராட்டத்தில்” இறங்கவேண்டும். தி.மு.க.தலைமையின் அறிவிப்பை, தங்கள் போராட்டங்களுக்குப் பச்சைக்கொடி எனக்கருதி தி.மு.க. இளைஞரணியினர், மானவரணியினர், மகளிரணியினர் மதுவிலக்குப் போராட்டத்தை துவக்கவேண்டும். குறிப்பாக, டாஸ்மாக் நிர்வாகம் 55 விதிமுறைகள் வகுத்திருந்தும், அவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பார்களை மூட முதலில் களமிறங்கவேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகு 30.08.1971 ல் தமிழகத்தில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.( 1974ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது) தி.மு.க. தீவிரப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்த ஆண்டு, 30.08.2015 க்குள் தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிப்பே வெளியாகும் வாய்ப்புள்ளது. களமிறங்குமா, தி.மு.க..? இல்லை அறிக்கையோடு நிறுத்திவிட்டு சட்டமன்றத் தேர்தல் வரும்போதுதான் மதுவிலக்கு குறித்துப்பேசுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தி.மு.க. மட்டுமல்லாமல், மதுவிலக்கை ஆதரிக்கும் பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், தே.மு.தி.க, கம்யூனிஸ்ட், வி.சி.க, நாம் தமிழர், த.மா.க., புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மதுவிலக்கு கோரி தீவிர போராட்டத்தை முன்னெடுத்தால், முடிந்தால் ஒருங்கிணைந்து போராடினால் விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வரும். ஓட்டுக்காக மட்டுமல்ல நாட்டுக்காகவும் நாங்கள் போராடுவோம் என்று அரசியல் கட்சிகள் களமிறங்கவேண்டிய தருணமிது.

 1. தி.மு.க.வினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படுமா.. ?

  தி.மு.க.வின் முன்னாள் மந்திரிகள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு போன்றவர்களாலும் கட்சிக்கு நெருக்கமானவர்களாலும் நடத்தப்படும் எலைட் டிஸ்லரி, கோல்டன் வாட்ஸ் டிஸ்டிலரி , எஸ்.என்.ஜே. டிஸ்லரி, , கால்ஸ் டிஸ்லரி போன்ற மதுபான உற்பத்தி ஆலைகளை மக்கள் நலன் கருதியும், கட்சியின் நிலைப்பாடு கருதியும் விரைவில் மூடுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்த வேண்டும். சமுதாய மாற்றத்திற்காக மதுவிலக்கை ஆதரிக்கும் கட்சியானது தனது கட்சியினர் மதுபான ஆலைகள் நடத்துவதை அனுமதிக்காது என்று நம்புகிறோம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் எங்கள் இயக்கம் பெற்றுள்ள புள்ளிவிவரத்தின் படி 2013-2014ம் நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.11876 கோடிக்கு மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், மேற்குறிப்பிட்ட மதுபான ஆலைகளிலிருந்து மட்டும் ரூ.3684 கோடிக்கு கொள்முதல் நடந்துள்ளது என்பதை தி.மு.க. தலைமையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு(31%). ( எலைட்-ரூ.659 கோடி, எஸ்.என்.ஜே. ரூ.1125 கோடி, கால்ஸ்: ரூ.1317 கோடி, கோல்டன் வாட்ஸ்: ரூ.583 கோடி )
 2. அ.தி.மு.க.வின் மதுவிலக்கு நிலைப்பாடு என்ன… ?

அ.தி.மு.கவைத் தவிர மிகப்பெரும்பாலான கட்சிகள் மதுவிலக்கிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. அரசியல் கணக்குகளை தள்ளிவைத்துவிட்டு சமூக நலன் கருதி-குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் நலன் கருதி ஆளுங்கட்சியே மதுவிலக்கு அறிவிப்பை வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். முதற்கட்டமாக, “பார்களை மூடுவது”, கடைகளின் எண்ணிக்கை, மதுவிற்பனை நேரம், நாட்களைக் குறைப்பது, மறுவாழ்வு மையங்கள் திறப்பது போன்ற நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ”

தற்போது தமிழக அரசின் சொந்த வரிவருவாயான 96083 கோடியில் ரூ.29672 கோடி
(31% ) டாஸ்மாக் விற்பனை மூலம் வருகிறது. சொந்தவரிவருவாயில், முக்கிய அம்சமான வணிகவரி மூலம் ரூ.72068 கோடியிலும் ரூ.22375 கோடி ( இதுவும் 31%) டாஸ்மாக் மூலம் வருகிறது. மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்வது எப்படி என்று ஆராய பொருளாதார நிபுணர்கள், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள், தொழிற்துறையினர் கொண்ட குழுவை அமைத்து அறிக்கை பெறவேண்டும். குஜராத்தில் மதுவருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியும்போது தமிழகத்தில் ஏன் அது முடியாது..?

வருமான இழப்பை ஈடுகட்டுவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்தது போல், கள்ளச்சாராயப் பிரச்னைகளை முறையாகக் கையாள்வதற்கு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து ஆய்வறிக்கை பெற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தியுள்ள குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் 843 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால், மதுவிலக்கை நாங்கள் அமல்படுத்தினால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்ப்பை ஈடுசெய்ய மத்திய அரசு தற்காலிக நிதியாவது தரவேண்டும்
என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்கவேண்டும்.
மதுவருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த நாங்கள் தயார் என்ற நிலைப்பாட்டிற்கு ஆளுங்கட்சி வந்தால்தான் இதுவெல்லாம் சாத்தியமாகும். அந்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம், சமுதாயத்தின் அவசியம் என்பதை ஆளுங்கட்சி உணரவேண்டும். இல்லையெனில், தேர்தல் சமயத்தில் மக்கள் உணர்த்துவார்கள்.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274

மதுவிலக்கு நோக்கி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பணிகள்:

16.03.2014 அன்று  “2016 மதுவிலக்கு ஆண்டு” என்ற பிரச்சாரத்தை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆரம்பித்தது. இந்த திட்டத்தின் நோக்கம் மதுவிலக்கு என்ற கோஷத்தை தமிழகசட்டமன்ற தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாக கொண்டுவர வேண்டும் என்பதே. அந்த சமயத்தில் மதுவிலக்கு என்பது ஒரு பெரிய விவாத பொருளாக இருக்கவில்லை.

32 நாட்கள் மதுவிலக்கு வேண்டி காந்தியவாதி சசி பெருமாள் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போதும் எந்த அரசியல் கட்சிகளும் இதில் பெரிய போராட்ட நிலையை எடுக்கவில்லை.மதுவிலக்கு என்பதை விவாத பொருளாக மாற்ற இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும் மற்றும் தமிழகத்தில் அதிகவாக்கு வங்கி வைத்துள்ள திமுக அல்லது அதிமுக மதுவிலக்கு ஆதரவு நிலையை எடுக்க வேண்டும்.

இதை மனதில் கொண்டு களம் இறங்கிய சட்ட பஞ்சாயத்து இயக்கம் முதலில் அனைத்து மது ஒழிப்பு ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியது.அவர்கள் செய்யும் போராட்டங்களுக்கு இயக்கத்தின் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மற்ற இயக்கங்கள் இணைந்து நடத்தும் போராட்டங்களில் சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மது விலக்கு மிஸ்டு கால் எண் மூலம் இதில் ஆர்வமுள்ளஅனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ( இதுவரை 17952 மிஸ்டுகால்கள் வந்துள்ளன )

மதுவிலக்கை அறிவிக்காத கட்சிகளுக்கு எதிராக சட்ட பஞ்சாயத்து இயக்கம் தேர்தல் பிரச்சாரம் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள்தயார் செய்யும் பணியும் நடந்து வந்தது. பல்வேறு மது ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் மற்றும் ஸ்டிக்கர்கள் இயக்கத்தின் சார்பாக வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக பல்வேறுநண்பர்கள் தங்கள் கடின உழைப்பும் நன்கொடைகளையும் கொடுத்துள்ளார்கள்.

மேலும் எங்கெல்லாம் மக்கள் மதுக்கடைகளுக்கு எதிராக திரளுகிறார்களோ அங்கெல்லாம் இயக்க நிர்வாகிகள் உடனடியாக சென்று போராட்டங்களில் கலந்து கொண்டும் அவர்களுக்குதக்க சட்ட ஆலோசனை கூறியும் உதவி செய்தார்கள். பல கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

மதுவிலக்கு குறித்து மக்கள் கருத்தை அறிந்துகொள்ள பல மாவட்டங்களில் “மக்கள் வாக்கெடுப்பு” (Public Referendum) நடத்தப்பட்டது. மேலும், வரும் சட்டமன்றத்தேர்தலில் ஓட்டுகேட்டு வீட்டுக்கு வரும் வேட்பாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்களிடம் மதுக்கடைகளை மூடுவதற்கு  உத்தரவாதம் கொடுக்கும் வகையில் கையெழுத்து பெற ”உறுதிமொழி” சீட்டு வினியோகம் செய்யப்பட்டது.

டாஸ்மாக்கில் விற்கப்படும் சாராயத்தில் ஆல்கஹால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும், குப்பைகள் மிதப்பதாகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சோதனைஅறிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பல பத்திரிகைகள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. டாஸ்மாக் நிர்வாகம் மறு சோதனை செய்து முடிவுகளை நமக்கு அனுப்பும்அளவுக்கு பிரச்சனை பெரிதானது.

இதனிடையே துரதிர்ஷ்டவசமான சில நிகழ்வுகளால் (சிறுவர்களுக்கு சாராயம் கொடுக்கும் வீடியோ) டாஸ்மாக் மீது மக்களின் கோபம் மிகவும் அதிகமானது. கடை முற்றுகை மற்றும்கடை உடைப்பு போராட்டங்கள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

இவை அனைத்தும் சேர்ந்து தான் நேற்று திமுக தலைவரை மதுவிலக்கு நோக்கிய திசையில் அறிக்கை அளிக்க உதவியுள்ளது. தற்பொழுது அதிமுக, தவிர ஏனைய அனைத்துகட்சிகளும் மதுவிலக்கு ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இனி மதுவிலக்கு பற்றி பேசாமல் 2016 தேர்தலை எந்த கட்சியும் சந்திக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு சட்டபஞ்சாயத்து இயக்கம் ஒரு சிறிய கருவியாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். மேலும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.. சாராயம் இல்லாத தமிழகம் உருவாக்குவோம்.நமது இளைய தலைமுறையை இந்த போதை நோயில் இருந்து காப்பாற்றுவோம்.

trbalu-jegatRatchagan

டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி: ஆகஸ்ட் 25

டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி: ஆகஸ்ட் 25, தமிழகமெங்கும்… அஞ்சலி செலுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் அழைக்கிறது …

SPI-Aug25-2014-AntiLiquor-Protest

சமூக ஆர்வலர்களே,

இலஞ்ச-ஊழல் ஒழிப்பு, மதுஒழிப்பிற்காகச் செயல்பட்டு வரும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ( http://www.facebook.com/sattapanchayath )  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகிற ஆகஸ்ட் 25 அன்று “டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம்” நடத்த உள்ளோம்.( நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது). சென்னையில் வள்ளுவர் கோட்டத்தின் அருகில் காலை 11மணிக்கு நடைபெறுகிறது.

ஏன் இந்தப் போராட்டம் அவசியம் என்பதை கீழ்க்காணும் செய்திகள்(உண்மைச் செய்திகள்) உணர்த்தும்:

— மாணவர்கள் மதுகுடிக்கத் தொடங்கும் வயது 13 (8ம் வகுப்பு)” ; ”மதுரையில், பெஞ்சை விற்று மதுகுடித்த மாணவர்கள்” ;

à“தேனியில், மதுக்கடைகளை எதிர்த்து தாலியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்திய பெண்கள்” ;

à“திருச்சியில், குடிகார கணவனின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த தாய், 3 பெண்குழந்தைகள் தீயில் கருகி மரணம்”

à”கடலூரில், ஒரே கிராமத்தில் குடியால் கணவனை இழந்த 50 விதவைகள் போராட்டம்”;

à ”சாலை விபத்து மரணங்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் – வருடத்திற்கு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரணங்கள்” ; 

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. (விவரங்கள் கீழே) ஏதேனும் ஒரு மாவட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளுங்கள். (காவல்துறை அனுமதியோடு நடைபெறும் ஆர்ப்பாட்டம் இது)

களப்போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், நோட்டீஸ்,பேனர் போன்ற செலவுகளுக்கு முடிந்த அளவு நிதியளிக்க வேண்டுகிறோம். ( 87545-80274 , spiaccts@gmail.com )

மதுஒழிப்பு செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க மிஸ்டுகால் கொடுங்கள். மிஸ்டுகால் எண்: 81441-66099

நன்றி.. என்றும் உங்கள் ஆதரவை வேண்டும்,

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,

சட்ட பஞ்சாயத்து இயக்கம்

87545-80274

**** மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள், தொடர்பு எண்கள் ***

கிழக்கு மண்டலம்: நாகை(9976783073), தஞ்சை(9788781404)

மேற்கு மண்டலம்: திருப்பூர்(9659745534), கோவை(9842360008), சேலம்( 9629101072), 

மத்திய மண்டலம்: அரியலூர்(9500085861), நாமக்கல்(9442863345)

தெற்கு மண்டலம்: மதுரை(87545-88222)

வடக்கு மண்டலம்: சென்னை(87545-80274),

திருவள்ளூர்(9884435925),

காஞ்சிபுரம்(9791505301)

Aug25-fb-Post

மதுக்கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாலி ஒப்படைப்பு போராட்டம்

டாஸ்மாக் மதுக்கடைகளால் கணவனைப் பறிகொடுத்துவிட்டு இளம்பெண்கள் விதவைகளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தேனி மாவட்ட தமிழ் புலிகள் அமைப்பு மற்றும் கரும்புலி குயிலிபேரவை சார்பில் டாஸ்மாக் மதுகடைகளை மூட வலியுறுத்தி தாலிகளை கழற்றி கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்ப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவினர் 28.07.2014 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினார்கள்.போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்களை காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.

40787835-e2a3-4afb-b92a-c578dce1f9d6_S_secvpf.gif

thaali oppataippu Theni Districi

மதுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது. 9 மதுபான நிறுவனங்களை  சசிகலா, சோ மூலம் பினாமியாக நடத்திவரும் ஜெயலலிதா போன்ற முன்னாள் சினிமா நடிகைக்கு தாலி அறுப்பதைபற்றி தெரியுமா? ஐந்துக்கும் ,பத்துக்கும், கஷ்டப்படும் குடிமகனின் குடிலைப்பற்றி தெரியுமா? அரிதாரம் பூசி ஆட்சியை கைப்பற்றிய ஆத்தாவுக்கு தெரியுமா? என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். காவல் துறையை வைத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஜெயலலிதா டாஸ்மாக்கை காப்பாற்றுகிறார் என்று பார்ப்போம்.

அநீதியான அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் குமுறி அழுத கண்ணீரே அந்த ஆட்சியை அடியோடு அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்.

http://www.maalaimalar.com/2014/07/29095123/tasmac-shop-closed-collector-o.html

 

குடிகார தந்தையால் சீரழியும் அரசுப் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவன்

10552606_825934670759465_6417619340436193084_n

ஒரு நம்பர்லேருந்து முந்தா நாள் நைட் மிஸ்டு கால் வந்திச்சு..

திரும்ப கூப்ட்டேன்…

“சார் நான் உங்க ஸ்டூடன்ட் விஜய் பேசுறேன் சார்…என் அப்பா, அம்மாவ குடிச்சிட்டு வந்து ரொம்ப அடிச்சாரு சார்…

நான் தடுத்தேன்..

படிக்கிற திமுராடான்னு கேட்டுட்டு, என்னோட எல்லா புக்கு, நோட்டையும் கிழிச்சு போட்டு கொளுத்திட்டாரு சார்..

நான் பப்ளிக் எப்புடி எழுதுறேன்னு பாக்குறேன்னு மெரட்டுறாரு சார்…

இப்ப நானும் அம்மாவும் வயக்காட்டுல, ஒரு வாய்க்காலுக்குள்ள படுத்துருக்கோம் சார்… நைட்டுக்குள்ள என்னைய வெட்டுறேன்னு அரிவாளோட சுத்துறாரு சார்… பயமா இருக்கு சார்.. எதாச்சும் பண்ணுங்க சார்.. இருங்க சார்… அம்மாகிட்ட போன் தர்றேன் பேசுங்க சார்..”

– 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பதறிப் பேச, என்ன செய்வதென்றே புரியவில்லை.
தொடர்ந்து போனை வாங்கிய அம்மா
, பேசுவதற்கு பதிலாக அழுதார்…

ஆசுவாசப்படுத்திய பின் பேசத் தொடங்கிய அவர்,

“மூணு மாசமா அடிக்கிறார் சார், தெனம் என்ன குடிச்சிட்டு வந்து…
எங்க அப்பா சொத்த வித்து அதுலேருந்து 50 ஆயிரம் ரூவா வாங்கிட்டு வான்னு அடிக்கிறாரு சார்.. போன மாசம் எல்லா துணிமணியையும் கொளுத்திட்டாரு…
என் புள்ள படிக்கணும் சார்.. படிக்க விடாம பண்ணிடுவார் போல… எப்புடியாச்சும் ஸ்டேஷன்ல சொல்லி, 2 வருஷம் உள்ள வைங்க…. அவன் படிக்கணும்” என அழ ஆரம்பித்தார்.

போனில் ஆறுதல் சொல்லி, அந்த கிராமத்திற்கு அருகே வசிக்கும் ஆசிரியரை அனுப்பினேன். அவர் போய் பார்த்து, அவர் வீட்டில் படுக்க வைத்துக் கொண்டார்…

நேற்றும் அப்படியே நடந்தது…

அது கிராமம்.. ஊரிலும் யாரும் கேட்கத் தயாரில்லை போலிருக்கிறது.. (கட்டுப்பாடு,சாதி-என பல இடையூறுகள்)

பையன் சுமாராகப் படிக்கக் கூடியவன்.. சூப்பராக படிக்க வைத்து விடலாம் நிச்சயம்..

“ஈட்டி எறிதலில்” நிச்சயமாக சாதனை புரியக் கூடியவன். இப்போதே மாவட்ட சாதனையையும் தாண்டி வீசுகிறான்.
வெளியில் தெரியாது. சரியான போட்டியை நோக்கி அவனோடு ஆசிரியர்கள் காத்திருக்கிறோம். தினமும் அவனது மதிய உணவில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால் அதைத் தாண்டி இவனுக்கு எவ்வளோ சிக்கல்கள் குடும்பத்தில் என்பது இரண்டு நாட்களுக்கு முன் தான் எனக்குத் தெரிய வந்தது.

அதிலிருந்து மனசே சரியில்லை…

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும்,அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதில் ஒரு மாணவனுக்கு உள்ள சிக்கலே இது. அவனது மன நிலையை நினைத்துப் பாருங்கள். அவனை ‘படி, எழுது’ என்றெல்லாம் சொல்வதற்கு முன்னர், வாழ வைப்பது முக்கியம்.

என் பணியில் பாதி நேரம், மாணவர்களுக்கு தைரியமூட்டுவதிலும், தேற்றுவதிலுமே தான் இருக்கிறது. என்னுடன் பனியாற்றும் ஆசிரியர்களுக்கே நான் எந்த மாணவனிடம் என்ன பேசுகிறேன்,என்ன செய்தேன் எனத் தெரியாது.
ஆனால் அதை முதலில் செய்துவிட்டால் அவர்களை படிக்க வைப்பது கொஞ்சம் எளிது.

சற்று முன் அவனிடம் பேசினேன்..

காவல் நிலையம் தன் அம்மாவோடு சென்று புகார் செய்ய, அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு, ‘முறையாக’ எச்சரித்து அனுப்பியிருக்கிறார்களாம்.இது வரை வீட்டிற்கு அவர் வரவில்லையாம்.

நிறைய அவனுக்கு தைரியம் சொன்னேன். ஆசிரியர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றிருக்கிறேன்..

எல்லாம் கேட்டுக் கொண்டு அவன் சொன்னது:

“இன்னைக்கு நைட்டு நான் என்னா சார் பண்றது..?,பயமா இருக்கு சார்..!” -Jaya Prabu

(முகநூளில் ஜெயபிரபு என்ற நண்பரின் பதிவிலிருந்து…

https://www.facebook.com/photo.php?fbid=825934670759465&set=a.165007976852141.35951.100000288188189&type=1&theater )

அன்புள்ள முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு அன்புடன் ஞாநி குடியால் பாதிக்கப்பட்ட உறவினர்கள், நண்பர்கள் நிறைந்த ஒரு தமிழன்.

அன்புள்ள முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு

(நன்றி:  http://www.gnani.net/?p=1521)

13

அன்புள்ள முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு

வணக்கம்.

உங்களை அம்மா என்று அழைக்க இயலாது. ஏன் என்று பின்னர் சொல்வேன். என்னைப் போன்றோர் சொந்த அம்மாக்களையே பெயர் சொல்லி அழைத்துப் பழகியவர்கள். இரவல் அம்மாக்கள் வாழ்க்கையில் தேவைப்படும் நிலையில் நாங்கள் இல்லை.

இதற்கு முன்னரும் நான் உங்களுக்கு சில பகிரங்கக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். எதையும் நீங்கள் பொருட்படுத்தியதில்லை என்றபோதும் தொடர்ந்து எழுதவேண்டிய சமூகத் தேவை இருப்பதாலும், மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி உங்களிடம் சில செய்திகளைப் பேசவேண்டியிருப்பதாலும் இதை எழுதுகிறேன்.

உங்களுக்கு நிச்சயம் மறந்திருக்காது. 1983ல் எம்.ஜி.ஆர் உங்களை அரசியலில் ஈடுபடுத்தியபோது ஒரு மகளிர் தினத்தன்று பேரணியை தலைமை தாங்கி அண்ணா சாலையில் நடத்திச் சென்றீர்கள். தெருவில் நீங்கள் நடந்து சென்றது அதன்பிறகு சுமார் 13 வருடங்கள் கழித்து 1996ல்தான் என்று நினைக்கிறேன். இந்த முறை எந்த நகை நட்டு, ஆடம்பரம் எல்லாவற்றிலிருந்தும் மகளிரை விடுவித்து அவர்களை நகை மாட்டும் ஸ்டாண்டாக இருக்கக்கூடாது என்று பெரியார் ஓயாமல் சொன்னாரோ, அப்படிப்பட்ட ஒரு நகை ஸ்டாண்டு-பட்டுப் புடவை தோற்றத்தில் தற்காலிக  வளர்ப்பு மகன் திருமண ஊர்வலத்தில் அடையாறு சாலையில் நடந்து வந்தீர்கள். இப்போது மேலும் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. அடுத்து உங்களை நான் இன்னும் எந்த தெருவிலும் நடந்து பார்க்கவில்லை.

இப்போது பெண்கள் தெருவில் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதை இந்த வாரம் வெளியாகியிருக்கும் கொலைச் செய்தி உணர்த்துகிறது.  உயர்கல்வி பெற்ற பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி சென்னையில் அதி நவீன தொழில்நுட்பப் பூங்கா(!)வில், தன் கணிணி அலுவலகத்திலிருந்து பஸ் நிலையத்துக்கு பத்திரமாக நடந்து செல்ல முடியாமல் போக்கிரிகளால் சீண்டப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாகிக் கொடூரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார். சீண்டல், கொலை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் மது.

தமிழ்நாட்டில் மதுக் கடைகள் இருக்கும் எந்தப் பகுதியிலும் பள்ளிச் சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை தைரியமாக நடமாடவே முடியாது. அருவெறுப்போடும், பயத்தோடும், மனதைக் கல்லாக்கிக் கொண்டும்தான் ஒவ்வொரு பள்ளிச் சிறுமியும் தினமும், காலையிலேயே டாஸ்மாக் கடை முன்னால் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கும் தமிழர்களை தாண்டிச் செல்கிறார்கள். அப்படிக் கிடப்பவர்களில் சில சமயம் அந்தப் பள்ளிச் சிறுமி. தன் ஆசிரியரையோ வகுப்பு சகமாணவனையோ கூட பார்க்க நேரும் வாய்ப்பும் அவலமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மதுவிலக்கு சட்டத்தின் கீழேயே அரசே மது விற்கும் ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடுதான். மலிவு விலையில் உணவகத்துக்கு அம்மா உணவகம், குடிநீருக்கு அம்மா குடி நீர், இனி அம்மா திரையரங்கம், என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழும் உங்கள் விஸ்வாசிகளுக்குக்  கூட, உங்கள் அரசு மிக அதிக எண்ணிக்கையில் நடத்தும் ஒரே தொழிலான மதுக்கடைகளுக்கு அம்மா ஒய்ன்ஸ் என்று பெயர் சூட்டத் தயக்கமாகவே இருக்கிறது. தன் பிள்ளைக்கு மது ஊற்றிக் கொடுத்து அவன் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்து குடும்பச் செலவுக்கு பயன்படுத்தும் எந்தத் தாயையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. அதனால்தான் என்னால் உங்களை அம்மா என்று அழைக்கவே இயலாது. ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமானம் மட்டும் உங்கள் அரசுக்கு இதிலிருந்து வரவேண்டுமானால், தினசரி எத்தனை தமிழர்கள் தவறாமல் மது குடிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? சுமார் ஒரு கோடி பேர் !

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் 65 ஆயிரம் சாலை விபத்துகள். இதில் 12 ஆயிரம் சாவுகள். இப்படி மாதாமாதம் ஆயிரம் பேர் கொல்லப்படும் விபத்துகளில் 70 சதவிகிதம் விபத்துகள் மதுவினால் ஏற்படுபவை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கல்லீரல் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியது, ஏன் பெருகியது என்பதை நீங்கள் பெருமையோடு சென்னையில் உருவாக்கியிருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவர்களிடம் தயவுசெய்து கேளுங்கள்.

மக்களவை தேர்தலுக்காக நீங்கள் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும், இந்த வாரம் அந்நிய தொழில் முதலீடாக  ஐந்தாயிரம் கோடி ரூபாய்களுக்கு தொழிற்சாலைகள் தொடங்கப்படவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறீர்களே. இந்த வேலைகளுக்கான இளைஞர்கள் எங்கே எந்த நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா? தமிழ்நாட்டில் ஐ.டி.ஐகள் எல்லாம் மூடப்பட்டுவருகின்றன. சேருவார் இல்லை. பிட்டர், வெல்டர், பிளம்பர், எலெக்றீஷியன், மேசன், கார்ப்பெண்டர் போன்ற தொழிலாளிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. காரணம் மதுதான். குடிக்க ஆரம்பிக்கும் வயது 11 ஆகிவிட்டது. உங்கள் அரசின் கஜானாவை நிரப்பும் ஒரு கோடி குடியர்களில் டீன் ஏஜ் இளைஞர்கள் ஏறத்தாழ சரிபாதி.

தமிழக இளைஞர்களையெல்லாம் குடிகாரர்களாக ஆக்கிய பெருமை, உங்களுக்கு மட்டுமே உரியது என்று நிச்சயம் நான் சொல்லமாட்டேன். அதைத் தொடங்கி வைத்தவர் உங்களுக்குப் பிரியமான அரசியல் எதிரி கலைஞர் கருணாநிதிதான். 1972ல் அவர் மதுவிலக்கை நீக்கியதில் முதல் பலி அவர் மகனேதான். உங்கள் வயதுதான் அவருக்கும். அப்போது 24 வயது இளைஞராகவும், பின்னாளில் சிறந்த பாடகராகவும் வரும்  ஆற்றலுடனும் இருந்த முத்துவின் வாழ்க்கை மதுப் பழக்கத்தால்தான் சீர்குலைந்தது. கலைஞர் கருணாநிதி அரசியலில் தொடங்கிவைக்கும் ஒவ்வொரு தவறையும் முறைகேட்டையும். பல மடங்கு பிரும்மாண்டமானதாக செய்யும் ஆற்றலும் உறுதியும் உடையவர் நீங்கள். வெறும் 3000 நூலகங்களே இருக்கும் தமிழகத்தில், 7500 மதுக்கடைகளை அரசின் மூலமே திறந்து. வீட்டுக்கொரு முத்துவை உருவாக்கியிருக்கிறீர்கள்.

எங்கிருந்து அவர்களுக்கு பணம் வருகிறது ? இந்தச் சுமையையெல்லாம்  தமிழகப் பெண்கள்தான் சுமக்கிறார்கள். குடும்பச் செலவையும் கவனித்துக் கொண்டு, கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன் என்று சகித்துக் கொண்டு அன்றாட சித்ரவதை வாழ்க்கையை வாழும் இந்தப் பெண்களை தயவுசெய்து ஒரு முறை இந்த மகளிர் தினத்தில் சிந்தித்துப் பாருங்கள்.

டெல்லி ஆட்சியில் உங்கள் கட்சி அமர்ந்தால், உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழர்களிடையே ஐ.நாவைப் பொது வாக்கெடுப்பு நடத்தச் செய்து தனி ஈழம்பெற்றுத் தருவேன் என்று தேர்தல் அறிக்கையில், வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டும் நீங்கள், தயவுசெய்து கூரை ஏறிக் கோழி பிடித்தால் போதும். உங்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர் வாக்கெடுப்பு நடக்கும்போது நடக்கட்டும். உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட தமிழகத்தில், மக்களிடையே மதுக் கடை வேண்டுமா வேண்டாமா என்று ஒரு பொது வாக்கெடுப்பை உடனடியாக  நடத்த நீங்கள் தயாரா?

அப்படி நடத்தினால், நூற்றுக்கு 99 சதவிகித பெண்களும் நூற்றுக்கு 90 சதவிகித ஆண்களும் நிச்சயம் மதுக்கடைகள் வேண்டாம் என்றே சொல்வார்கள். குடிப்பவர்களில் கூடப் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்வார்கள். எளிதாகக் கிடைப்பதால் குடிப் பழக்கத்துக்குள் நுழைவோரே அதிகம். எளிதாகக் கிடைப்பதால் விட்டுவிடமுடியாமல் பழக்கத்தில் சிக்கித் தவிப்போரே கணிசம். அத்தனை பேரையும் நீங்கள் மனது வைத்தால் மீட்கமுடியும்.

உங்கள் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ முறை நீங்கள். முதலில் எடுத்த முடிவுக்கு நேர் எதிராக இன்னொரு முடிவை எடுத்த வரலாறு உண்டு.  ஒரே கையெழுத்தில் ஒரு லட்சம் அரசு ஊழியரை வேலை நீக்கம்செய்த நீங்கள், இன்னொரு கையெழுத்தில் அத்தனை பேரையும் திரும்ப எடுத்தீர்கள். கோவில்களில் விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்து உடனே திரும்பப் பெற்றீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில் தனி ஈழத்தையும் புலிகளையும் கடுமையாக எதிர்த்த நீங்கள், இன்று ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு கோருகிறீர்கள். ராஜீவ் கொலைவழக்கின் தண்டனைக் கைதி நளினியை, பரோலில் விடக் கூடக் கடுமையாக மறுத்து வந்த உங்கள் அரசு, அடுத்த சில மாதங்களிலேயே நேர் எதிர் நிலை எடுத்து, அவரையும் மற்றவர்களையும் விடுதலையே செய்ய முன்வந்திருக்கிறது.

நீங்கள் ஒவ்வொருமுறையும்  நிலைப்பாட்டை மாற்றியது எல்லாமே, தேர்தல் அரசியலுக்காக; ஓட்டுக்காக என்று நான் உட்பட உங்கள் விமர்சகர்கள் கருதினாலும்,பரவாயில்லை – பொய்மையும் வாய்மையிடத்தே, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின், என்றே கருதுகிறோம். ஒன்றை எந்த நோக்கத்துக்காக நீங்கள் செய்தாலும், அந்த செயல் பொது நன்மைக்கு உதவுமென்றால் ஏற்போம்.

அந்த வரிசையில் இப்போது உங்களுக்கு ஓட்டு அரசியலில், உங்கள் எதிரிகளை நூற்றுக்கு நூறு முறியடித்து மக்களவை தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று, டெல்லி ஆட்சியை வசப்படுத்த ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.

இந்த மார்ச் 31டன் இந்த நிதியாண்டு முடிகிறது. ஒரே கையெழுத்தில் நீங்கள் இந்த நிதியாண்டுடன் டாஸ்மாக் மதுக்கடைகளை அனைத்தையும் மூடி உத்தரவிட்டு, பூரண மதுவிலக்கை ஏற்படுத்திவிடலாம். அதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை. கள்ளச் சாராயம், விஷச் சாராய சாவுகள் பெருகும் என்ற பூச்சாண்டியை, சில அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் மது ஆலை அதிபர்களும் கிளப்புவார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த சுமார் 30 வருடங்களில் அப்படி கள்ளச் சாராயத்தால் செத்தவர்கள் எண்ணிக்கை மொத்தமாகவே பத்தாயிரம் பேர் கூட கிடையாது. ஆனால் மதுவால் சாலை விபத்தில் சாவோர் ஆண்டு தோறும் சுமார் எட்டாயிரம் பேர். நோயால் சிதைவோர் பல லட்சம் பேர். அவர்களால் சீரழியும் குடும்பங்கள் லட்சக்கணக்கானவை.

நீங்கள் மதுக் கடைகளை மூட உத்தரவிட்டால், எந்த டாஸ் மாக் ஊழியரையும் வீட்டுக்கு அனுப்பத் தேவையில்லை. அத்தனை கடைகளையும் பார்களையும்,  அம்மா உணவகங்களாகவோ, மருந்தகங்களாகவோ, குடிநீர் கடைகளாகவோ மாற்றிவிடலாம். மக்களுக்கும் லாபம். ஊழியர்களுக்கும் இழப்பில்லை.உங்களுக்கோ மிகப் பெரும் ஆதரவு, எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைக்கும். குறித்துவைத்துக் கொள்ளுங்கள். மீதி அத்தனை விஷயங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகத்தின் 50 சதவிகித வாக்காளர்களான எல்லா பெண்களும் உங்கள் அணிக்கே வாக்களிப்பார்கள். தமிழக அரசியல் வரலாற்றில், அ.இ.அ.தி.மு.க வரலாற்றில் இதுவரை பெற்றிராத வாக்கு சதவிகிதங்களுடன் டெல்லிக்குச் செல்வீர்கள். ஒவ்வொரு ஏழைத் தமிழ்ப் பெண்ணும் நிம்மதியாக இரவு உறங்கச் செல்வாள்.

தமிழகப் பெண்களுக்கெல்லாம் வயிற்றில் பால் வார்க்கும் செய்தியாக, மார்ச் 8 மகளிர் தினத்தன்று இந்த அறிவிப்பை உங்களிடம் எதிர்பார்க்கலாமா? மறுபடியும் தரைக்கு வந்து தெருவில் மக்களோடு மக்களாக நடந்து சென்று ஒரு மகளிர் பேரணி நடத்தி இதை அறிவிப்பீர்களா?

இது வரை என் எந்தக் கடிதத்துக்கும் பதிலளிக்காத நீங்கள் இதற்கேனும் ஒரு பதிலை உங்கள் செயல்மூலம் அளிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்

ஞாநி

குடியால் பாதிக்கப்பட்ட

உறவினர்கள், நண்பர்கள் நிறைந்த ஒரு தமிழன்.

(கல்கி மார்ச் 1, 2014)

களியக்காவிளையில் உடைக்கப்பட்ட TASMAC கடை. விரைவில் தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கிறோம்.

களியக்காவிளையில் உடைக்கப்பட்ட TASMAC கடை. விரைவில் தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கிறோம்.

இதுபோல தமிழகம் முழுவதும் அரசு சாராயக்கடைகள் மக்களால் அப்புறப்படுத்தப்பட மக்கள் தயாராக வேண்டும்.

களியக்காவிளை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மீது பொதுமக்கள் மதுபாட்டில் மற்றும் கல்வீசி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வந்த ஜீப், பைக்,Image

சரக்கு ஏற்றிவந்த டெம்போ அடித்து உடைக்கப்பட்டது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சமுதாயபற்று பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு ஆரம்பம் முதலே அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடையை திறக்க எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டோம் என்று ஏற்கனவே அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஒரு டெம்போ நிறைய மதுவகைகள் அந்த கடையில் இறக்குவதற்காக கொண்டு வரப்பட்டது.

இதையறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். மதுபானம் கொண்டு வந்த டெம்போவை சுற்றிவளைத்து, அதிலிருந்த மதுபாட்டில்களை எடுத்து போலீசார் மீது வீசியும், நடுரோட்டில் போட்டும் உடைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து கல்வீச்சிலும், மதுபாட்டில் வீச்சிலும் ஈடுபட்டதில் போலீஸ்காரர் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.

பின்னர் போராட்டக்காரர்கள் களியக்காவிளை போலீசார் வந்த ஜீப்பையும் அடித்து உடைத்தனர். சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் யாரும் நெருங்க முடியாதபடி மதுபாட்டில் மற்றும் கல்வீச்சு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதில் களியக்காவிளை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், டாஸ்மாக் ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர். இந்தநிலையில் எல்லையோர காவல் நிலையங்களில் உள்ள கேரள போலீசார் மற்றும் குமரி மாவட்ட போலீசார் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் டெம்போவில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது.

 

எஞ்சியிருந்த மதுபாட்டில் பெட்டிகளை அந்த வழியே பைக்கில் வந்தவர்கள் எடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் யி8 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே சரக்கு ஏற்றி வந்த டெம்போவும் உடைக்கப்பட்டது. அந்த பகுதியில் போலீசார் வந்த பைக் ஒன்றையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவியவண்ணம் இருந்தது. ஒரு வழியாக சம்பவம் இடத்தை சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எஸ்.பி. மணிவண்ணன் நேரில் வந்து அப்பகுதியை பார்வையிட்டார்.

டாஸ்மாக் கடை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பகுதியில் தெருவிளக்கு வசதி ஏதும் இல்லை. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் இருள்சூழ்ந்த நிலையில் காணப்பட்டது. அந்த பகுதி பொதுமக்களுக்கு இடங்கள் தெரிந்தநிலையில் போலீசார் கல்வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து இருளுக்குள் இருந்து கல் வருமோ என்ற பீதியால் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் காத்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மதுபான பாட்டில்கள் வீசப்பட்டதால் அந்த பகுதிகளில் சாலை முழுவதும் கண்ணாடி துண்டுகளாக சிதறி காணப்பட்டன. இதனால் கால்களை அவை பதம்பார்க்குமோ என்ற பயத்தால் போலீசார் தாக்குதல் நடந்த இடத்தை நெருங்கவில்லை.

நன்றி: தினகரன் 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=96956

இதுபோல தமிழகம் முழுவதும் அரசு சாராயக்கடைகள் மக்களால் அப்புறப்படுத்தப்பட மக்கள் தயாராக வேண்டும்.